Thursday, 28 July 2016

55, ஸ்ரீ க்ருஷ்ணரின் அருள்வாக்கு


55. ஸ்ரீ க்ருஷ்ணரின் அருள்வாக்கு


ஸ்ரீ க்ருஷ்ணரும் உத்தவரும்.

ஸ்ரீ ராமரும் க்ருஷ்ணரும் நாம் கொண்டாடும்  மஹத்தான அவதாரங்கள். இவர்களை விட்டு இன்று ஹிந்துமதமே இல்லை எனலாம்.  வைதீக கர்மாக்களும்  இவர்களுக்கே ஸமர்ப்பணமாகின்றன.


ஸ்ரீ ராமர்  தர்மத்தை அனுசரித்துக் காட்டினார். அதிகம் பேசவில்லை. ஸ்ரீ க்ருஷ்ணர் தர்மத்தை அனுசரித்ததுடன் அதன் சூக்ஷ்மங்களையும் விளக்கினார்.  யுக வித்தியாசத்தால் இந்த இரு அவதாரங்களின் அணுகுமுறையில்  முக்கிய வித்தியாசங்கள்  இருக்கின்றன.

ஸ்ரீ க்ருஷ்ணரின்  முக்கிய உபதேசங்கள் கீதையில் இருப்பதாகக் கொள்கிறோம். ஆனால்  அவற்றில் எது முக்கியமானது என்பது பற்றி பண்டிதர்களிடையேயும் பெரியவர்களிடையேயும்  ஒருமித்த கருத்து இல்லை! 

கீதையின்  தாத்பர்யம்

கீதையில் பல விஷயங்கள்  பல கோணத்திலிருந்து அலசப்படுகின்றன. இது க்ருஷ்ண - அர்ஜுன  ஸம்வாதமாக இருப்பதால்  விஷயங்கள் முன்னும் பின்னும் விரவி வருகின்றன. இதைப் படிக்க உட்காரும் நாமும் சும்மா வருவதில்லை! பலவித கருத்துக்களையும் கொள்கைகளையும் மனதில் ஏற்றிக்கொண்டே  வருகிறோம். நமது கருத்துக்கு அங்கு ஆதாரம் தேடுகிறோம்! கீதையில் என்ன சொல்லியிருக்கிறது என்று  ஆழ்ந்து பார்ப்பதில்லை!

கீதையின் ஒவ்வொரு அத்யாயத்தின் முடிவிலும்  ஒரு குறிப்பு வருகிறது. 
"  ஸ்ரீமத் பகவத்கீதாஸு உபனிஷத்ஸு  ப்ரஹ்மவித்யாயாம் யோக ஶாஸ்த்ரே ஸ்ரீ க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே "  என்று வருகிறது. ' ப்ரஹ்ம வித்தையாகவும், யோக ஶாஸ்திரமாகவும்  ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபனிஷதமாகவும் உள்ள , க்ருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த இந்த உரையாடல் '  என்று இது  பொருள்தருகிறது. 

1. இது  ப்ரஹ்மவித்தை : ப்ரஹ்மமே  ஒரே அடிப்படை உண்மை.  இந்த ப்ரபஞ்சம்  அந்த ப்ரஹ்மத்தின்  வெளிப்பாடே- தோற்றமே.. ப்ரஹ்மத்தை விட்டு ப்ரபஞ்சமில்லை. இதை அனுபவத்தில் கண்டுகொள்வதுதான் ப்ரஹ்மவித்தை. [ அபரோக்ஷ அனுபூதி-  கொள்கைப்பிடிப்பு அல்ல ] இதுவே வைதிக மதத்தின் அடிப்படைக் கோட்பாடு. 
2. உபனிஷதம் : அந்த அடிப்படை உண்மையை பல நிலைகளிலிருந்து விளக்கி  அதனருகே நம்மை இட்டுச் செல்வது . இது குரு நமக்குச் செய்யும்  பெரிய  உபகாரம். 
3. யோக ஶாஸ்திரம் :  இந்த அடிப்படை உண்மையை அனுபவத்திற்குக் கொண்டுவரும் வழியை போதிப்பது. 

பகவத் கீதை இந்த மூன்று அம்சங்களையும் கொண்டது. ஆனால் பகவானின் நேரடி வாய்மொழியாக இருப்பதால் , இது மற்றவற்றைக்காட்டிலும் உயர்ந்தது.  வேதம் காடுபோன்று  அடர்ந்து விரிந்தது. அதற்குள்  நுழைந்து ப்ரஹ்மத்தை  உணர முடியாது. உபனிஷதங்கள் உயர்ந்த விஷயங்களைப் பேசும் ; ஆனால் அவற்றை  எப்படி நடைமுறையில் அனுசரிப்பது என்பதை அவை சொல்லவில்லை !  யோகப் பாதையோ  சந்து-பொந்துகள் நிறைந்ததாக ஆகிவிட்டது.  பகவத்கீதை மட்டுமே  நமக்கு  தெளிவான பாதையைக் காட்டுகிறது.

கீதைக்கு முன்னும் பின்னும்

வேதம் ப்ரஹ்மத்தை நிர்குண- நிராகார நிலையில்  காட்டுகிறது. உபனிஷதம் அதையே ஆத்மாவெனப் பேசும். ஆனால் கீதையோ, அந்த ப்ரஹ்மத்தையும் இந்த ப்ரபஞ்சத்தையும்  "வாஸுதேவமய " மெனக் காட்டும். [ வாஸுதேவ ஸர்வமிதி ]. கற்பனைக் கெட்டாத  அந்த ப்ரஹ்மம் நாம் எளிதில் வழிபடும் பொருளாகிறது! இதுவே கீதையில் பகவான் நமக்குச் செய்துள்ள  அருள் ! கீதைக்குமுன் இந்த நிலை வைதீக சமயத்தில் இல்லை!

கீதைக்குமுன் வைதிக  சமயத்தில் இரு பெரும் நடைமுறைகள் இருந்தன. ஒன்று, வைதீக கர்மாக்களைச் செய்து படிப்படியாக உலகப்பற்றை விட்டு  மோக்ஷமாகிய உயர் நிலையைத் தேடுவது. இது கர்மகாண்டம். 
மற்றொன்று, நேரடியாக இந்த ப்ரபஞ்சத்தின்  [ ஜீவன், ஜகத், ஈஶ்வரன் } இயல்பை  ஆராய்ந்து, ப்ரஹ்மத்தை உணர்வது, இது ஞான மார்கம். 
இதையே பகவான் கீதையில் " நான் ஆதியில்  ஸாங்க்யம். யோகம் என்ற இரு நிஷ்டைகளை ஏற்படுத்தினேன் " என்று சொன்னார். [3.3.]
காலப்போக்கில் இவை  மறைந்துவிட்டன. மறைந்தது என்றால் காணாமல் போய்விடவில்லை - கெட்டுப்போய்விட்டன = இயல்பு திரிந்துவிட்டன. கர்மகாண்டம் என்பது வெறும் யாக-யஜ்ஞங்களைச் செய்து  போகம் தேடும்  சடங்குத்தனமாக மாறிவிட்டது. ஞான யோகம் என்பதோ, வரட்டு வேதாந்த வாதமாகிவிட்டது. 

கீதையில் கர்மமும் ஞானமும்

இந்த இரண்டு நிலைகளிலிருந்தும்  மாறுபட்ட ஒருபுதிய முறையை பகவான் நமக்குக் கீதையில் காட்டினார். அதன்படி, பகவானே எல்லாம் என்றுணர்ந்து, அவரையே  பக்திசெய்து  பரகதியடைதல் முக்கியம்.  இதில் கர்மமும் ஞானமும் வராமலில்லை. ஆனால் அவற்றின் தன்மை முன் நிலையிலிருந்து வேறுபட்டது. 


ஒவ்வொருவரும் அவரவர் குண- கர்மங்களுக்கேற்ப   இயல்பாக  அமைந்த கர்மங்களை   மட்டிலும் ஆசையும், பலனில் பற்றும் விட்டு பகவான் யஜ்ஞம் - ஆராதனை எனச்  செய்தல். இது கர்மயோகம்.  ஆனால் இவர்களும் பகவானை வழிபடவேண்டும் .
 பகவானே அனைத்தும் - இந்த ப்ரபஞ்சம் முழுதும் பகவானே நிறைந்துள்ளார் என அறிவதுவே ஞானம். எனவே, கர்மத்துக்கும் ஞானத்துக்கும் அடிப்படையாக இருப்பதும் பக்தியே. இதுவே பகவத் கீதை நமக்குப் புகட்டும் பாடம். 

இதையே பகவான்  வேறு ஒரு இடத்தில் வேறு ஒருவருக்குச் சொல்லியிருக்கிறார் ! இது ஸ்ரீமத் பாகவதத்தில் 11வது  ஸ்கந்தத்தில் ஸ்ரீ உத்தவ கீதை என்ற பெயரில் வழங்கி வருகிறது.


Title page from a free ebook.indiannova.com

உத்தவர் பகவானின் அத்யந்த  பக்தர்- உறவினரும் கூட. பகவானின் சாயலையே கொண்டவர்.  இவருடைய பக்தி  தத்வ விசாரம் நிறைந்தது. அதனால் ஒருமுறை  பகவான் இவரை  கோபிகைகளின் இடத்திற்கு அனுப்பி, அவர்களுடைய ராக பக்தியை- அதன் மேன்மையை - உணரச் செய்தார்!   உயர்ந்த பக்திக்கு கோபிகளை மட்டுமே உதாரணம் காட்டுவார் ஸ்ரீ நாரதர்  தன்  'பக்தி சூத்ரத்'தில்.

உத்தவருக்கு  உபதேசம்

ஸ்ரீ பகவான் தன் அவதார லீலைகளை நிறைவு செய்து  இவ்வுலகை விட்டுக் கிளம்ப  நிச்சயித்தார். யாதவகுலமும் தன் கர்வத்தினாலும் ஆணவத்தினாலும் அழிவடையும் நிலையை நெருங்கியது. 'இன்னும் ஒரு வார காலத்தில் த்வாரகையை கடல் கொள்ளும்; எல்லோரும் த்வாரகையை விட்டு ப்ரபாஸ க்ஷேத்ரத்திற்குச்  சென்றுவிடுங்கள் ' என  பகவான்  யாதவகுல பெரியவர்களுக்குச் சொல்லிவிட்டார். அதன்படி அவர்கள்  த்வாரகையை நீங்கத்  தயாராகினர். 

இதை அறிந்த உத்தவர்  சோகவசப்பட்டார். பகவானை விட்டு எப்படி இருப்பது?  அவரிடமே ஒடிவந்தார். " பகவானே ! உங்களுடைய ஒவ்வொரு லீலையும் எங்களுக்கு மங்களத்தை அளிக்கின்றன. 

तव विक्रीडितं कृष्ण नृणां परममङ्गलम्।

  தவ விக்ரீடிதம் க்ருஷ்ண ந்ருணாம் பரம மங்களம்  11.6.44 .

 நாங்கள் கர்மத்திலேயே  சுழன்றுகொண்டிருக்கிறோம். ஆனால் உங்கள் லீலைகளைப் பார்த்தும் அவற்றைப்பற்றிச் சிந்தித்தும் பேசியும் வருவதால்  அதனாலேயே நாங்கள் இந்த உலக மாயையைக் கடந்து விடுவோம். 

स्मरन्तः कीर्तयन्तस्ते कृतानि गदितानि च।

  ஸ்மரன்த கீர்தயன்தஸ்தே  க்ருதானி கதிதானி ச  11. 6. 49 

உங்களை விட்டு நாங்கள்  எப்படி இருப்போம் என விண்ணப்பித்தார். அந்த சமயத்தில் உத்தவருக்கு பகவான் அருளிய உபதேசங்களே   " ஸ்ரீ உத்தவ கீதை " என்ற பெயரில் வழக்கிலுள்ளது.  பகவான் பெயரில் இல்லாமல், பக்தர் பெயரில் இருப்பதே இதன் மஹிமைக்கு ஒரு சான்று !  பகவானின் இறுதி உபதேசம் பக்தியே என்பது இதனாலும்  தெளிவாகிறதல்லவா? 

இதிலிருந்து சில முக்கிய  ஶ்லோகங்களை இனிப் பார்ப்போம்.



No comments:

Post a Comment