Thursday, 14 July 2016

42.கீதை என்னும் பொக்கிஷம்-4



42. கீதை என்னும் பொக்கிஷம்-4




கீதைக்கு ஏன் இவ்வளவு பெருமை?

சாஸ்திரக் குழப்பம்


நமது மதத்தில் சாஸ்திரங்களுக்குக் குறைவில்லை! மலை, மலையாகக் குவிந்திருக்கின்றன! அவற்றிற்கு எழுதப்பட்ட வ்யாக்யானங்களும் மூட்டை மூட்டையாக, வண்டிவண்டியாக இருக்கின்றன. புதிது புதிதாக விளக்கங்களும் மேலும் மேலும் வந்தவண்ண மிருக்கின்றன.
இவற்றை விளக்கவந்த ஆசார்யர்களும், பண்டிதர்களும் தத்தம் அனுபவப்படியும் (அனுபவமில்லாமலும்கூட) மனப்போக்கின்படியும் பலவாறு சொல்கிறார்கள். அடிப்படை உண்மை என்பது ஒன்றுதான்; ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்த ஆயிரம் வழிகள்! தடைகள்!
 "தர்மம் சர " = தர்மத்தைச் செய் என்கிறது வேதம் ! ஆனால் எது தர்மம் என்பதில்தான் குழப்பமே உருவாகிறது! அவதூதர் ஸ்ரீ தத்தாத்ரேயர் சொல்கிறார்:

ந ஹ்யேகஸ்மாத்  குரோர் ஞானம் 
ஸுஸ்திரம் ஸ்யாத் ஸுபுஷ்கலம்
ப்ரஹ்மைததத்விதீயம்  வை கீயதே பஹுதர்ஷிபி:


இரண்டற்றதான ஒரே ப்ரஹ்மம்  ப்ரஹ்ம ஞானிகளால் பலவாறாக  [அவரவர்கள் அனுபவித்தபடி ] விளக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் ஒரே ஒரு ஆசாரியனிடமிருந்து  முழுமையான, நிலையான ஞானத்தைப் பெற முடியாது.
[ஸ்ரீமத் பாகவதம். 11.9.31 ]

க்ருஷ்ணாந்தமே நமக்கு வேதாந்தம் !


இந்த நிலையில் சம்ஸாரக்கடலில் சிக்கிய நமக்கு கலங்கரை விளக்காக இருப்பது ஸ்ரீமத் பகவத்கீதை ஒன்றுதான். இங்கு பகவானே ஆசார்யராகவும் குருவாகவும் இருந்து, நமது அநாதி தர்மத்தின் சூக்ஷ்மங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். வேதமரபின் சாரத்தை தேன்போல் திரட்டித்தந்திருக்கிறார். 'இதைச் செய், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன் ' என்று சத்யப்ரதிக்ஞை செய்திருக்கிறார். இதற்குமேல் சொல்ல எதுவும் இல்லை; யாரும் இல்லை!

கீதைக்கும் விளக்கம் என்றபெயரில் பலர் எழுதி குட்டை குழப்பியிருக்கிறார்கள். கீதை பகவானின் நேர்மொழி. இது எளிய சொற்களில் அமைந்தது. இது சாதனையையே ப்ரதானமாகக் கொண்டது, தத்துவ விசாரத்தையல்ல. கீதையைப் படிப்பதற்கு வேதாந்த தத்துவத்தைக் கற்கவேண்டிய அவசியம் இல்லை. பகவான் வாய்மொழியே- க்ருஷ்ணாந்தமே  நமக்கு வேதாந்தம், சித்தாந்தம் எல்லாம் ஆகும். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தயங்கவேண்டாம். "என் பக்தர்களுக்கு நானே புத்தியோகம் தருவேன் " என்று பகவானே சொல்லியிருக்கிறார். 


ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।।10.10।।

ததாமி புத்தியோகம் தம் யேன மாம் உபயான்திதே    10.10

எந்தபுத்தியோகத்தின் மூலம் என்னை அடைவார்களோ  அதை நான் அளிக்கிறேன்.

அதனால்  சாதனையில் நாட்டம்கொண்ட யாரும் கீதையைக் கற்கலாம். பண்டிதர்களைப் பற்றி நமக்கு அக்கறையில்லை.



த்யானம் - யோகம் - பக்தி

6வது அத்யாயம் "த்யான யோகம்" எனப்படுகிறது. இதில் யோகமார்கத்தில் இருப்பவன் மேற்கொள்ளவேண்டிய த்யானமும் மற்ற பயிற்சிகளும் விளக்கப்படுகின்றன. இங்கு அர்ஜுனன் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறான். யோக முயற்சியில் ஈடுபட்டவன் அதிலிருந்து தவறிவிட்டால் என்ன நேரும்? அவன் இவ்வுலகையும் இழந்து உயர்ந்த யோக நிலையையும் தவறவிட்டவனாக மாட்டானா? இதற்கு பகவான் ஆணித்தரமாக பதில் சொல்கிறார். 'நல்ல ஆன்மீக மேம்பாட்டிற்கான முயற்சியில் ஈடுபட்டவனுக்கு அழிவு என்பது இல்லை. அவன் மறுபிறவியில் தக்க சூழ்நிலையில் பிறந்து தன் முயற்சியைத் தொடர்வான், படிப்படியாக இலக்கை எய்துவான் '  என்று சொல்கிறார்.

नहि कल्याणकृत्कश्िचद्दुर्गतिं तात गच्छति।।6.40।।

ந ஹி கல்யாணக்ருத் கஶ்சித் துர்கதிம் தாத கச்சதி         6.40

இங்கு யோகத்தைப் பற்றிச் சொன்னாலும் யோகிகளுக்கும் பக்தி அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.


प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः।

मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः।।6.14।।



ப்ரஶான்தாத்மா விகதபீர்  ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித:
மந: ஸம்யம்ய மச்சித்தோ  யுக்த ஆஸீத மத் பர:             6.14

ப்ரஹ்மசர்ய விரதத்தில்  நிலைத்து, பயத்தைவிட்டு, நன்கு மனவமைதி  பெற்ற த்யானயோகி, விழிப்புணர்வுடன் தன் மனதையடக்கி,  என்னையே மனதில் நினைத்தவனாக , என்னையே அடையத்தக்க சிறந்த கதி எனக்கொண்டு  நிலைபெற்று இருக்கவேண்டும்.



युञ्जन्नेवं सदाऽऽत्मानं योगी नियतमानसः।

शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति।।6.15।।


யுஞ்ஜன்னேவம்  ஸதாத்மானம்  யோகீ நியதமானஸ:
ஶான்திம் நிர்வாண பரமாம் மத்ஸம்ஸ்தானிம் அதிகச்சதி              6.15


மனதைத் தன்வசப்படுத்திய யோகி இவ்விதம்  ஆத்மாவை இடையறாது என்னுடைய  ஸ்வரூபத்தில்  இணைத்துக்கொண்டு என்னிடம் விளங்குகின்ற பரமானந்தப்  பெருநிலையாகிய  ஶாந்தியை அடைகிறான்.


ஆக எத்தகைய யோகியும் பகவானைவிட்டு ஶான்தி பெற முடியாது!

यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति।

तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति।।6.30।।



யோ மாம் பஶ்யதி ஸர்வத்ர  ஸர்வம் ச மயி பஶ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஶ்யாமி ஸ ச மே ந ப்ரணஶ்யதி                    6.30

எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ ,  எல்லாவற்றையும் என்னிடம் பார்க்கிறானோ அவனுக்கு நான் காணாமல் போவதில்லை; அவனும் எனக்கு காணாமல் போவதில்லை.

सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः।

सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते।।6.31।।


ஸர்வபூத ஸ்திதம் யோ மாம்  பஜத்யேகத்வமாஸ்தித:
ஸர்வதா வர்தமானோபி ஸ யோகி மயி வர்ததே                         6.31

எல்லா உயிர்களிலும் உறையும் என்னை எவன் ஒற்றுமையில் நிலைபெற்றுத் தொழுகின்றானோ, அந்த யோகி எந்த நிலையில் இருந்தாலும், எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் என்னிடத்திலேயே இருக்கிறான்.

இந்த இரண்டு ஶ்லோகங்களும் 'வாசுதேவன்' என்பதற்கு விளக்கமாக உள்ளன. பகவான் அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான். அகக்காட்சி பெற்ற யோகியானாலும் சரி, பக்தனானாலும் சரி,  பகவானை இவ்விதம் தெரிந்துகொள்ளவேணும். உண்மை பக்தியுள்ளவன் காக்கைச் சிறகினிலும் நந்தலாலாவின் கருமையையே காண்பான்.  " எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே" என்றார் அப்பர் ஸ்வாமிகள். " ஈஶா வாஸ்யம் இதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் " என்பது உபனிஷதம். பகவான் எங்கும் நிறைகின்ற பரம்பொருள். இன்னும் சொன்னால் விரியும். பகவானைக் காணாதவன் யோகியாக முடியாது.

இதையே பகவான் இன்னும் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார் :

பக்தனே பெரிய யோகி


योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना।

श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः।।6.47।।



யோகினாமபி ஸர்வேஷாம் மத்கதே நான்தராத்மனா
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:         6.47


யோகிகளுக்குள்ளும் எவன் என்னிடத்தில் ஶ்ரத்தையுள்ளவனாக, என்னிடம் ஈடுபாடுகொண்டு மனதார என்னை வழிபடுகிறானோ, அவனே உயர்ந்தவன் என்பது என்னுடைய கொள்கை= முடிவான கருத்து.

எனவே, யோகம் என்பது ஏதோ 'டெக்னிகலாக' மூக்கை-நாக்கைப் பிடித்துக்கொண்டு மூலையில் உட்காருவதல்ல. பகவான் இல்லாமல் யோகம் இல்லை! "மே மதம்" என்று இங்கும் பகவான் சொல்வதைக் கவனிக்கவேண்டும்.







No comments:

Post a Comment