47.கீதை என்னும் பொக்கிஷம்- 9
www.chennaitamilulaa.net
ஸ்ரீ பகவான் யஜ்ஞ கர்மத்தின் சூக்ஷ்மத்தை விளக்கினார். எது தவிற்கக்கூடாததோ ( நியதம் கர்ம, கார்யம் கர்ம ) அதை மட்டும் செய்யவேண்டும்; ஸ்வர்கம் முதலிய போகங்களில் இச்சைகொண்டு செய்யக்கூடாது. பகவான்தான் அதை ஏற்றுக்கொள்பவர், பலன் தருபவர்- யஜ்ஞம் பூராவுமே பகவான் மயமானது என்ற புத்தியுடன் செய்யவேண்டும். இப்படி இல்லாமல் போகத்தில் இச்சைகொண்டு செய்பவர்கள் அப்போகங்களைப் பெற்றாலும் மீண்டும் மீண்டும் பிறப்பு -இறப்புச் சுழலாகிய ஸம்ஸாரத்தில் வீழ்கிறார்கள் . இதை நீ செய்யாதே என்று அர்ஜுனனுக்கு ( (நமக்கும்தான்= நம் போன்ற 'மக்கு' களுக்கும்தான் ) சொல்கிறார்.
இனி, பக்தி நெறியின் பல உன்னத ரஹஸ்யங்களைச் சொல்கிறார்.
எந்த போகத்திற்கும் ஆசைப்பட்டு யஜ்ஞம் செய்யாதே என்றார். அப்படியானால் அவனுக்கு வேண்டியது எப்படி வரும்? பகவானே சொல்கிறார்.
अनन्याश्िचन्तयन्तो मां ये जनाः पर्युपासते।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्।।9.22।।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्।।9.22।।
அனன்யாஶ்சின்தயன்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் 9.22
எந்த பக்தர்கள் வேறு எதிலும் நாட்டமில்லாது என் ஒருவனையே த்யானித்து உபாஸிக்கின்றார்களோ- இடைவிடாது என்னையே நினைத்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய யோகக்ஷேமத்தை நானே அடையச்செய்கிறேன்.
வேண்டிய பொருளை அடைவது யோகம். அதைக் காப்பது க்ஷேமம். பக்தர்களுக்காக இது இரண்டையும் பகவானே செய்கிறார். பகவானை அடைவதே பெரிய யோகம் . முன்பு ஒரு இடத்தில், "நீ உன் யோகக்ஷேமத்தைப் பற்றிச் சிந்திக்காதே " என்றார். [2.45 ] பக்தர்களின் யோகக்ஷேமத்தைத் தானே ஏற்றுக்கொள்கிறார் என்று இங்கு விளக்குகிறார் !
यान्ति देवव्रता देवान् पितृ़न्यान्ति पितृव्रताः।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्।।9.25।।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्।।9.25।।
யான்தி தேவவ்ரதா தேவான் பித்ரூன் யான்தி பித்ருவ்ரதா
பூதானி யான்தி பூதேஜ்யா யான்தி மத்யாஜினோபி மாம் 9.25
தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளை அடைகின்றனர்; பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைகின்றனர்; பூதங்களை வழிபடுவோர் பூதங்களை அடைகின்றனர். என்னைப் பூஜிப்பவர்கள் என்னை அடைகின்றனர்.
பகவானை எப்படி பூஜிப்பது?
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः।।9.26।।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः।।9.26।।
பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி ப்ரயதாத்மன: 9.26
எவன் பக்தியுடன் எனக்கு இலை, புஷ்பம், பழம், நீர் இவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, தூய பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்ட அவற்றை நான் அருந்துகிறேன். (ஏற்றுக் கொள்கிறேன். )
இங்கு பக்தி ஒன்றுதான் ப்ரதானம். யார் கொடுப்பது, என்ன கொடுத்தார்கள் என்பது பொருட்டன்று,
" யோ " = யார், யாரானாலும். சபரி, குஹன், முதலிய எளியவர்களும்.
பத்ரம் =இலை. த்ரௌபதி கொடுத்தது ஒரு கீரை இலை!
புஷ்பம் = கஜேந்த்ரன் கொடுத்தது ஒரு தாமரைப் பூ
ஃபலம் = பழம் .சபரி கொடுத்தது
தோயம் = நீர். ரந்தி தேவன் கொடுத்தது.
இப்படி புராணத்தில் பல வரலாறுகள் உண்டு.
यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्।।9.27।।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्।।9.27।।
யத்கரோஷி யதஶ்னாஸி யத் ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌன்தேய தத்குர்ஷ்வ மத் அர்ப்பணம். 9.27
குன்தி மைந்தனே ! எந்தக் கர்மத்தைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதைத் தானம் செய்கிறாயோ, எந்த தவம் செய்கிறாயோ -அது அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு.
शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि।।9.28।।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि।।9.28।।
ஶுபாஶுப ஃபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மப்ந்தனை :
ஸன்யாஸ யோக யுக்தாத்மா விமுக்தோ மாம் உபைஷ்யஸி 9.28
இவ்வாறு அனைத்துச் செயலையும் பகவானுக்கே அர்ப்பணிப்பதாகிய ஸந்யாஸ யோகத்தில் ஈடுபட்ட நீ , நல்லது - தீயது என்ற (இருமைகளின் மயமாகிய ) பலன்களாகிய கர்மத்தளையிலிருந்து விடுபடுவாய். அவ்விதம் விடுபட்டு என்னையே அடைந்து விடுவாய்.
ஸன்யாஸ யோகம் = கர்மத்தின் பலனை பகவானுக்கு அர்ப்பணிப்பதே உண்மை ஸன்யாஸம். இதை 18வது அத்யாயத்தில் விளக்குவார்.
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्।।9.29।।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्।।9.29।।
ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய :
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்ய ஹம். 9.29
நான் எல்லா உயிர்களிலும் ஸமமாக நிறைந்துள்ளேன். எனக்கு வேண்டியவன் - வேண்டாதவன் என்று யாரும் இல்லை. ஆனால் எவர்கள் பக்தியுடன் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் என்னிடமும், நான் அவர்களிடமும் இருக்கிறேன்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். "நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே " என்றார் பட்டினத்தார். "வேண்டுதல் வேண்டாமை இலான் " என்பார் வள்ளுவர். நாம் எப்படி அணுகுகிறோமோ அப்படியே பகவான் இருப்பார்.
अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक्।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः।।9.30।।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः।।9.30।।
அபி சேத் துராசாரோ பஜதே மாம் அனன்யபாக்
ஸாதுரேவ ஸ மன்தவ்ய : ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ : 9.30
மிக துர்நடத்தை உள்ளவனும் (அதை விட்டு ) வேறு நாட்டமில்லாமல் என்னை வழிபடுவானேயானால், அவன் நல்லவன் என்றே கருதப்படத்தக்கவன். ஏனெனில் அவன் நல்ல தீர்மானமே செய்திருக்கிறான்.
क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति।
कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति।।9.31।।
कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति।।9.31।।
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஶஶ்வச்சான்திம் நிகச்சதி
கௌன்தேய ப்ரதிஜானீஹி நமே பக்த ப்ரணஸ்யதி 9.31
அவன் விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான். நிலையான அமைதியை அடைகிறான்.குன்தி மகனே ! என்னுடைய பக்தன் நாசமடைவதில்லை என்பதை நன்கு உணர்ந்து உலகத்திற்கு அறிவிப்பாயாக !
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9.32।।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9.32।।
மாம் ஹி பார்த்த வ்யபாஶ்ரித்ய யேஅபி ஸ்யு: பாபயோனய:
ஸ்திரியோ வைஶ்யாஸ் ததா ஸூத்ராஸ்தேஅபி யான்தி பராம் கதிம் 9.32
பார்த்தா ! பெண்கள், வைசியர்கள், ஸூத்ரர்கள ஆகியவர்களும், இழிந்த பிறவி யடைந்த யாராக இருந்தாலும் அவர்களும் என்னையே தஞ்சமடைந்து மேலான பேறாகிய மோக்ஷத்தை அடைகிறார்கள்.
இத்தகைய பலரின் வரலாறுகளை ஸ்ரீமத் பாகவதத்தில் பார்க்கிறோம்.
किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम्।।9.33।।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम्।।9.33।।
கிம் புனர்ப்ராஹ்மணா : பக்தா ராஜர்ஷயஸ்ததா
அ நித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் 9.33
அங்ஙனமிருக்க, புண்யம் செய்யும் ப்ராம்மணர்களைப்பற்றியும், பக்தர்களான ராஜரிஷிகள் பற்றியும் சொல்ல என்ன இருக்கிறது?நிலையில்லாததும் சுகமில்லாததுமான இந்தப் பிறவியை அடைந்த நீ எப்போதும் என்னை வழிபடுவாயாக.
இந்த உலகம் அநித்யமாக இருந்த போதிலும், அந்த அநித்யப்பொருள்களைக் கொண்டே பகவானை அடையவேண்டும் என்பது குறிப்பு.
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः।।9.34।।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः।।9.34।।
மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மானம் மத்பராயண : 9.34
என்னிடம் மனதை நிலைநிறுத்து. என் பக்தனாகிவிடு. என்னைப் பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்காரம் செய். இவ்விதம் உன்னை என்னிடம் முழுதும் (ஆத்மார்த்தமாக ) ஈடுபடுத்தி, என்னையே அடையத்தக்க ஒரே புகலாகக் கருதி என்னையே அடைவாய்.
இவ்விதம் இந்த 9வது அத்யாயம் பக்தியின் சிகரம் எனலாம். இதில் வரும் கருத்துக்கள் 18வது அத்யாயத்தில் மீண்டும் வலியுறுத்தப் படும். இந்த 34 வது ஶ்லோகம் அங்கு 65வது ஶ்லோகமாக வரும்! இதில் கர்மம் (யஜ்ஞம் ), ஞானம், பக்தி ஆகியவை பற்றிய ஒரு புதிய கோணத்தை நமக்குக் காட்டியிருக்கிறார். பக்தி எல்லாவற்றையும் உள்ளடக்கியது, எல்லாவற்றிற்கும் மேம்பட்டது என்று காட்டியிருக்கிறார்.
ஆனால் இவர் சொல்லும் பக்தி " அனன்ய பக்தி "= பகவானைத்தவிர வேறு ஒன்றையும் நாடாதது. இதை மீண்டும் 18வது அத்யாயத்தில் சொல்வார். இந்த 9வது அத்யாயத்தில் ஸ்ரீ பகவான் சொல்லும் முக்கியமான் விஷயங்கள்:
- பகவான் எல்லாமாகி இருப்பவர். ஆனால் எதிலும் கட்டுப்படாதவர் !
- தெய்வீக இயல்பு உள்ளவர்கள் பகவானை வழிபடுகிறார்கள்.
- அனன்ய சிந்தையால் வழிபடுபவர்களின் யோகக்ஷேமத்தை பகவானே வஹிக்கிறார்.
- பகவானின் பக்தர்களுக்கு அழிவில்லை.
- அனித்ய, சுகமில்லாத இந்த உலகத்தை அடைந்த நாம் பகவானை வழிபடவேண்டும்.
- நாம் பகவானில் ஆத்மார்த்தமாக ஈடுபடவேண்டும்.
- இவை இவ்வுலகத் தீமையிலிருந்து விடுதலை தரும்.
No comments:
Post a Comment