41. கீதை என்னும் பொக்கிஷம்-3
ஸ்ரீமத் பகவத் கீதை ஓர் அபூர்வமான நூல்.
பகவத் கீதை நம்போன்றவர்களுக்கு!
இது பண்டிதர்களுக்காக எழுந்ததல்ல ! நம் போன்ற சராசரி மக்களுக்காக எழுந்தது. அர்ஜுனன் நம் போன்றவர்களின் ப்ரதிநிதியாவான். அர்ஜுனன் க்ஷத்ரிய மரபிற்குரிய கல்வி கற்றுத்தேர்ந்தவன். தர்மத்தை ஓரளவு அறிந்தவன். ஆனால் யுதிஷ்டிரன் போல் 'தர்மம், தர்மம்' என்று அலையவில்லை ! தர்மம், தர்மம் என்று சொல்லியே யுதிஷ்டிரன் அனைவருக்கும் கஷ்டத்தை விளைவித்தான்! அர்ஜுனனோ, பெரிய கஷ்டம் என்று வந்த சமயத்தில் தர்மம் என்ன என்று தெரியாமல் குழம்பி பகவானையே கேட்டுவிட்டான் ! இது நமது பாக்யமாக அமைந்தது! பகவானின் வாய்மொழியாகவே தர்மத்தின் சூக்ஷ்மத்தை அறியமுடிந்தது! அர்ஜுனன் என்ற கன்றின் வாயிலாக நாம் அனைவரும் கீதை என்ற பாலமுதத்தைப் பெற்றோம்!
ப்ரஹ்மரிஷி- ராஜரிஷி !
பகவான் முதலில் ஸாங்க்யம், யோகம் என்ற இரண்டு புராதன நிஷ்டைகளைப் பற்றிக் கூறினார். இங்கு ஒரு சூக்ஷ்மவிஷயம் வருகிறது. ஸாங்க்யத்தை ஞானயோகம் அல்லது ப்ரஹ்ம நிஷ்டை எனலாம். இங்கு யோகம் என்பது கர்மயோகத்தைக் குறிக்கிறது. இதைப்பற்றி விளக்கவந்த பகவான், ' இதை நான் விவஸ்வானுக்குச் சொன்னேன், அவன் தன் மகன் மனுவுக்குச் சொன்னான்; மனு தன் மகன் இக்ஷ்வாகுவுக்குச் சொன்னான் ; இப்படிப் பரம்பரையாக வந்திருந்த இந்த யோகத்தை "ராஜரிஷிகள் " அறிந்திருந்தார்கள் 'என்கிறார் ! [4.1,2] ஜனகர் முதலியோர் இதையே செய்து நற்பேறு பெற்றார்கள் என்கிறார் [3.20]. இவர்கள் அனைவருமே க்ஷத்ரிய அரசர்கள்! எனவே, இந்த கர்மயோகத்தின் ரகசியம் அரசமரபினருக்கே சொந்தம் போலும் ! அதனால், ஸாங்க்யம் என்பது ப்ரஹ்மரிஷிகளுக்கு உரியதானது போலும்! அரசர்களுக்கு உலகை ரக்ஷிக்கவேண்டிய தர்மம்-கர்மம் ( க்ஷத்ரம்) இருந்தது; அதை அவர்கள் யோகமாகச் செய்து ராஜரிஷியானார்கள். ப்ராமணர்களுக்கு ப்ரஹ்மனிஷ்டை தவிர வேறு தர்மம் இல்லை! அதனால் அவர்கள் ப்ரஹ்மரிஷிகளானார்கள் போலும்!
பல்வேறு வழிகள் !
இந்த இரண்டு நிஷ்டைகளைத்தவிர மக்கள் பின்பற்றும் வேறுபல வழிகள் பற்றியும் பகவான் சொல்கிறார். பித்ருக்கள் வழிபாடு, தேவதைகள் வழிபாடு, பூதங்கள் வழிபாடு பற்றியெல்லாம் சொல்கிறார். எதையும் மட்டமாகச் சொல்லவில்லை! ஆனாலும் தன் கொள்கை, கருத்து-மதம் என்று வரும்போது பக்தியையே- தெய்வ வழிபாட்டையே உயர்வாகச் சொல்கிறார் ! 'பித்ருக்களை வழிபடுபவன் பித்ருக்களை அடைகிறான்; தேவர்களை வழிபடுபவன் தேவர்களை அடைகிறான்; பூதங்களை வழிபடுபவன் அவற்றை அடைகிறான்; என்னை வழிபடுபவன் என்னையே அடைகிறான்' என்று சொல்கிறார். [9.25 ] பகவானை அடைபவனுக்கு மறுபிறவியில்லை! அறிவுள்ளவன் இதை அறிந்தபின் வேறு இடங்களை நாடுவானா?
கர்மம்: யோகம், யஜ்ஞம்
மூன்றாம் அத்யாயத்தில் கர்மத்தைப் பற்றிப் பேசிய பகவான், நான்காம் அத்யாயத்திலும் அதையே தொடர்கிறார். இது பகவான் கையாளும் ஒரு முறை. ஒரு விஷயத்தை ஒரு இடத்தில் ப்ரஸ்தாபிக்கிறார்; பின்னர் பல இடங்களில் அதைப்பற்றிப் பல கோணத்திலிருந்து விளக்குகிறார். நாம் அத்யாயத்தின் தலைப்பைப்பார்த்து மயங்கிவிடக்கூடாது!
மூன்றாம் அத்யாயத்தில் கர்மத்தை யோகமாகச் செய்வது பற்றி விளக்கினார். நான்கில் அதை யஜ்ஞமாகச் செய்வது பற்றி விளக்குகிறார். கர்மத்தின் போக்கு அறிவதற்கரியது [ கஹனா கர்மணோ கதி: 4.17 ]
என்கிறார். பலவித யஜ்ஞங்களைப்பற்றிச் சொல்கிறார்.
பகவான் "நான் இந்த யோகத்தை விவஸ்வானுக்குச் சொன்னேன்" என்றதும் அர்ஜுனனுக்குச் சந்தேகம் எழுகிறது! விவஸ்வான் ஏதோ பழைய யுகத்தில் இருந்தவன் ; க்ருஷ்ணன் நம் எதிரே இருப்பவன்! இவர் எப்படி விவஸ்வானுக்குச் சொல்லியிருக்க முடியும்? 'என்ன ஐயா, இதை நான் எப்படி நம்புவது ' என்று அவரிடமே கேட்கிறான். இதற்கு விடையாக பக்தி நெறியின் பல ரஹஸ்யங்கள் வெளிவருகின்றன !
பகவான் "நான் இந்த யோகத்தை விவஸ்வானுக்குச் சொன்னேன்" என்றதும் அர்ஜுனனுக்குச் சந்தேகம் எழுகிறது! விவஸ்வான் ஏதோ பழைய யுகத்தில் இருந்தவன் ; க்ருஷ்ணன் நம் எதிரே இருப்பவன்! இவர் எப்படி விவஸ்வானுக்குச் சொல்லியிருக்க முடியும்? 'என்ன ஐயா, இதை நான் எப்படி நம்புவது ' என்று அவரிடமே கேட்கிறான். இதற்கு விடையாக பக்தி நெறியின் பல ரஹஸ்யங்கள் வெளிவருகின்றன !
பக்தியின் அடிப்படை : பகவான் !
श्री भगवानुवाच
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप।।4.5।।
பஹூநி மே வ்யதீதானி ஜன்மானி தவ சார்ஜுன
தான்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்தி பரன்தப 4.5
எதிரிகளை வாட்டும் அர்ஜுன! எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கழிந்துவிட்டன. அவை அனைத்தையும் நான் அறிவேன், நீ அறியமாட்டாய்.
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया।।4.6।।
அஜோஅபி ஸன்னவ்யயாத்மா பூதானாமீஶ்வரோஅபிஸன்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா 4.6
நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், எல்லா உயிரினங்களுக்கும் ஈஶ்வரனாக இருந்தாலும்கூட, என்னுடைய ப்ரக்ருதியை வசப்படுத்திக்கொண்டு, என்னுடைய மாயையினால் வெளிப்படுகிறேன்.
[ இங்கு மாயை என்பது பகவானுடைய யோகமாயை- ஐஶ்வர்ய ஶக்தி.]
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानमधर्मस्य तदाऽऽत्मानं सृजाम्यहम्।।4.7।।
யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். 4.7
பரதகுலத்தோன்றலே ! எப்பொழுதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் நான் என்னைப் படைத்துக் கொள்கிறேன் ( காணுமாறு வெளிப்படுகிறேன் ).
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।
பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே 4.8
ஸாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்கும் நான் யுகந்தோறும் வெளிப்படுவேன்.
எவ்வளவு சீரிய கருத்துக்கள் ! எவ்வளவு எளிய வார்த்தைகளில் எவ்வளவு நேரடியாகச் சொல்லிவிட்டார் ! இன்று ஹிந்துமதம் பக்தியையே ஆதாரமாகக் கொண்டது ! அதற்கு ஆதாரமாக இருப்பது ராமர்-க்ருஷ்ணர் என்ற இரு பெரும் அவதாரங்கள் ! ராமர் தன்னை மனிதனாகவே காட்டிக்கொண்டார். இங்கு க்ருஷ்ணர் தன் தெய்வத்தன்மையை வெளியிடுகிறார்! இங்கு மேலும் ஒரு சீரிய விஷயத்தைச் சொல்கிறார்.
जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन।।4.9।।
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுன 4.9
அர்ஜுனா! என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை. [ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவை ] இதை எவன் உள்ளபடி அறிவானோ அவன் உடலைவிட்டபின் மீண்டும் பிறவியடையமாட்டான். அவன் என்னையே வந்தடைகிறான்.
பகவானை அடைபவர்கள்
वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः।।4.10।।
வீதராக பயக்ரோதா மன்மயா மாம் உபாஶ்ரிதா
பஹவோ ஞானதபஸா பூதா மத்பாவம் ஆகதா: 4.10
ஆசை, பயம், கோபம் இவற்றை அறவே விட்டவர்களும், என்மயமானவர்களும் [பக்தியால் என்னுடன் ஒன்றியவர்களும்], என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்களும் ஆன பலர் ஞானம் என்னும் தபஸால் தூயவர்களாய் என் ஸ்வரூபத்தை அடைந்திருக்கிறார்கள்.
[இங்கு ஞானம் என்பது, முன் ஶ்லோகத்தில் கூறியபடி பகவானின் தெய்வீகத் தன்மையை அறிவதுதான் ]
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः।।4.11।।
யே யதா மாம் பரபத்யன்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மானுவர்தன்தே மனுஷ்யா: பார்த ஸர்வஶ : 4.11
பார்த்தா! யார் என்னை எவ்விதம் நாடுகின்றார்களோ நான் அவர்களுக்கு அவ்விதமே அருள்செய்கிறேன். ஏனெனில் எல்லா மனிதர்களும் பலவிதத்திலும் என்னுடைய வழியையே அனுசரிக்கிறார்கள்.
இங்கு பகவான் மிக அரிய ரகசியங்களை மிக எளிதாகச் சொல்லியிருக்கிறார். உள்ளதாம் பொருள் என வேதங்கள் தேடி உணர்ந்து ஓதும் அந்தப் பரம்பொருள், பிறப்பற்றதாக (அஜோபி) இருந்தாலும், அழிவற்றதாக (அவ்யயம்) இருந்தாலும் நமக்காக இங்கு அவதாரமாக வருகிறது! இதுவே பகவானின் ரகசியம்! இதையறிந்து பகவானிடம் சரணடைபவர்கள் பகவானையே அடைகிறார்கள். அவர்களுக்கு மறுபிறவி இல்லை! எவ்வளவு நேரடியாகச் சொல்லிவிட்டார்! இதில் தத்துவத்தைப் புகுத்தி மண்டையை ஏன் குழப்பிக்கொள்ளவேணும்?
கீதையின் நான்காம் அத்யாயத்தின் பெயர் ஞானகர்ம ஸன்யாஸ யோகம் என்பது. அதில் பக்தி பற்றிய எவ்வளவு முக்கியமான கருத்துகள் வருகின்றன! நாம் அத்யாயத்தின் தலைப்பை மட்டும் பார்த்துக்கொண்டு போகக்கூடாது!
No comments:
Post a Comment