45. கீதை என்னும் பொக்கிஷம்-7
ஸ்ரீமத் பகவத் கீதையை பெரியவர்கள் பலவகையில் அணுகுகிறார்கள், அனுபவிக்கிறார்கள். இதில் உள்ள 18 அத்யாயங்களை மூன்றாகப் பிரித்து, முதல் 6 அத்யாயங்களில் கர்மயோகம் விளக்கப்படுகிறது என்றும், அடுத்த 6 அத்யாயங்கள் பக்தி பற்றியவை என்றும், இறுதி 6 அத்யாயங்கள் ஞானயோகம் பற்றியவை எனவும் கருதும் ஒரு ஸம்ப்ரதாயம் இருக்கிறது. ஆனால் பகவான் எதை முக்கியமானதாகச் சொன்னார் என்று பார்த்தால் , பக்தியே ஓங்குகிறது. இதைப் பல இடங்களில் பகவான் வாக்கிலேயே பார்க்கிறோம்.
கீதையை 18 அத்யாயங்களாகப் பிரித்த பெரியவர் பக்தியோகம் என்றே 12வது அத்யாயத்தை வகுத்திருக்கிறார். ஆனால் உண்மையில் பக்தி பற்றிய அதிக விஷயங்கள் பிற இடங்களிலேயே வருகின்றன. அதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.
உயர்ந்த ரஹஸ்யம்
இப்படி வருவதில் மிக முக்யமானது 9வது அத்யாயம். இதற்கு மிகப்பொருத்தமாகப் பெயர் அமைந்திருக்கிறது! " ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் " : ராஜ வித்தையும், ராஜ ரஹஸ்யமும் ! பக்தி உபாஸனை பற்றிய பல அரிய விஷயங்களை இங்கு பகவான் கூறுகிறார். பக்தி பற்றிய விஷயத்திற்கு "ராஜ வித்தை- ராஜ ரஹஸ்யம் " என்று சொன்னதே அதன் உன்னதத்தைக் காட்டுகிறது! இந்த பதங்கள் பகவானது வாக்கிலேயே வருபவை !
श्री भगवानुवाच
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्।।9.1।।
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அனஸூயவே
ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஶுபாத் 9.1
எதைத் தெரிந்து கொண்டதால் அஶுபத்திலிருந்து விடுதலை பெறுவாயோ அந்த ஞானத்தை விஞ்ஞானத்தோடு கூடியதாய் உனக்கு விளக்கிச் சொல்வேன். இது மிகவும் உயர்ந்த ரஹஸ்யம். (குஹ்ய தமம் ).
இங்கு அஶுபம் என்பது என்ன ? இந்த உலகமே துக்க வடிவானது, அதனால் உலகியலே அஶுபம் என்பர் ஒரு சாரார். நம்முடைய அஞ்ஞாநத்தினால் தான் நாம் கஷ்டப்படுகிறோம் ; அஞ்ஞானமே அஶுபம் என்பர் இன்னொரு சாரார்.
உலகம் துக்க மயம் என்பதன் பொருள் என்ன? உலகில் ஏதோ ஒருவகையில் கஷ்டம் என்று அனுபவிக்காதவர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் இந்த உலகப்பற்றை விட்டுவிடுவதற்கு யாரும் தயாராக இல்லை! கஷ்டம் என்று இருந்தாலும், துளி சந்தோஷமும் இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் துக்கம் என்று சொல்வதில்லை. பிறந்த மனிதன் ஒவ்வொருவனும் மூப்பு, நோய், மரணம் என்பதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகு மீண்டும் பிறவி, அதே சுழல்! "புனரபி ஜனனம் புனரபி மரணம் " என்றார் சங்கரர். இதைத்தான் துக்கமயம் என்று பெரியவர்கள் சொன்னார்கள். புத்தரும் அப்படித்தான் சொன்னார். இதைத்தான் இங்கு பகவான் அஶுபம் என்று குறிப்பிட்டார் என்று சொல்லலாம். இது கீழ்வரும் 3ம் ஶ்லோகத்தில் தெளிவாகும். " மோக்ஷயஸே அஶுபாத் " என்ற இந்த வார்த்தைகளை பகவான் 4 வது அத்யாயத்தில் 16 வது ஶ்லோகத்திலும் சொல்லியிருக்கிறார். கர்மத்தின் சூக்ஷ்மம் தெரியாமல் அவற்றைச் செய்து மக்கள் எப்படி இந்த ஸம்ஸாரத்திலேயே சுழல்கிறார்கள் [கர்ம பந்தம் ]என்ற பொருளிலேயே அங்கும் சொல்லியிருக்கிறார்.
[ இந்த உலகம் துக்க வடிவானது என்று 6 இடங்களில் பகவான் சொல்லியிருப்பதை நாம் முன் ஒரு கட்டுரையில் பார்த்தோம். பின்னர் வந்த புத்தர் இதையே முக்கியமான கொள்கையாக எடுத்துக்கொண்டார் . புத்த மதத்தில் இதுவே முதல் படி]
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम्।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम्।।9.2।।
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம். 9.2
இது ராஜவித்தை; ராஜரஹஸ்யம்; பவித்ரமானது; உத்தமமானது. இதைக் கண்கூடாக உணரலாம். தர்மத்திலிருந்து விலகாதது ;பின்பற்ற எளிதானது. அழிவற்றது.
अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि।।9.3।।
அஶ்ரத்ததானா : புருஷா தர்மஸ்யாஸ்ய பரன்தப
அப்ராப்ய மாம் நிவர்தன்தே ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி 9.3
எதிரிகளை வாட்டுபவனே ! இந்த தர்மத்தில் நம்பிக்கையில்லாத மனிதர்கள் என்னை அடையாமல் மரணவடிவான ஸம்ஸார சக்கரத்தில் சுற்றிக்கோண்டே இருக்கிறார்கள்.
[ இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேன்டும்.. பகவானை அடைவதே பெரிய தர்மம். இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டே இருக்கிறார்கள்.
இந்த தர்மத்திற்கே பகவான் இத்தனை அடைமொழிகள் கொடுத்திருக்கிறார்: ராஜவித்யா, ராஜரஹஸ்யம், குஹ்ய தமம், பவித்ரம், உத்தமம், தர்ம்யம், அவ்யயம். (பின்னால் இன்னும் வரும்)வேறு எந்த யோகத்திற்கோ, சாதனைக்கோ பகவான் இப்படிச் சொல்லவில்லை ]
பகவானும் உலகமும்
நம: ஸவித்ரே ஜகத் ஏக சக்ஷுஸே !
मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः।।9.4।।
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்த்தினா
மத் ஸ்தானி ஸர்வ பூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித : 9.4
உருவமற்ற என்னால் இந்த உலகம் முழுவதும் வ்யாபிக்கப்பட்டுள்ளது. பொருள்கள் (உயிர்கள் ) எல்லாம் என்னிடம் இருப்புள்ளன. நானோ அவற்றில் நிலைபெற்றிருப்பதில்லை. ( அவற்றில் கட்டுப்படுவதில்லை. )
न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम्।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः।।9.5।।
ந ச மத்ஸ்தானி பூதானி பஶ்ய மே யோகமைஶ்வரம்
பூதப்ருன்ன ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவன : 9.5
(ஒரு விதத்தில் ) அந்தச் சராசரங்கள் எல்லாம் என்னிடத்தில் இருப்பவையும் அல்ல ! என்னுடைய ஈஶ்வரத்தன்மையின் யோக சக்தியைப் பார் ! என்னுடைய ஆத்மா பொருள்களைத் தாங்குவது; பொருள்களை உண்டாக்குவது; ஆனால் அவற்றில் தங்குவது இல்லை (அவற்றிற்குள் அடங்குவது இல்லை )
यथाऽऽकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान्।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय।।9.6।।
யதாகாஶஸ்திதோ நித்யம் வாயு : ஸர்வத்ரகோ மஹான்
ததா ஸர்வாணி பூதானி மத்ஸ்தானி இதி உபதாரய 9.6
எங்கும் வீசுகின்ற பெரும் காற்று எவ்வாறு ஆகாயத்தில் உள்ளதோ அவ்வாறே எல்லாப் பொருள்களும் [உலகங்களும்] என்னிடம் உள்ளன என அறிந்துகொள்.
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम्।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम्।।9.7।।
ஸர்வபூதானி கௌன்தேய ப்ரக்ருதிம் யான்தி மாமிகாம்
கல்பக்ஷயே புனஸ்தானி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம் 9.7
குன்தி புத்ரனே ! எல்லா உலகங்களும் கல்பத்தின் முடிவில் என்னுடைய ப்ரக்ருதியை அடைகின்றன. ( லயமாகிவிடுகின்றன ). கல்பத்தின் ஆரம்பத்தில் அவற்றைத் திரும்பவும் தோன்றச்செய்கிறேன்.
प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात्।।9.8।।
ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புன: புன:
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஶம் ப்ரக்ருதேர் வஶாத் 9.8
இந்த ப்ரக்ருதி என் வசத்திலிருப்பது. ஆனால் இந்த ப்ரக்ருதிக்கு வசப்பட்ட உயிர்த்தொகுதிகள் (தம் வசமிழந்தவை ) அனைத்தையும் திரும்பத் திரும்பத் தோற்றுவிக்கிறேன்.
मयाऽध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम्।
हेतुनाऽनेन कौन्तेय जगद्विपरिवर्तते।।9.10।।
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி : ஸூயதே ஸசராசரம்
ஹேதுனானேன கௌன்தேய ஜகத்விபரிவர்த்ததே 9.10
குன்தி மைந்தனே ! தலவனான என்னுடைய கண்காணிப்பில் ப்ரக்ருதியானது இந்தச் சராசர ( அசைவன- அசையாதன ) உலகைத் தோற்றுவிக்கிறது. இந்தக் காரணத்தினால் ஸம்ஸார சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது.
பகவான் முன்பும் ( 7ம் அத்யாயம் ) பர-அபர ப்ரக்ருதியைப் பற்றிச் சொன்னார், இங்கு மேலும் விளக்குகிறார்.
இந்தப் பௌதிக உலகம்தான் நம்மை மயக்குகிறது, அதனால் அதன் உண்மை ஸ்வபாவத்தைத் தெரிந்துகொள்ள வேணும். இந்த உலகம் - ப்ரக்ருதி- பகவானுக்கு அடங்கியது, ஓரளவுக்கு இது பகவானிலிருந்தே வெளிப்படுகிறது. ஆனால் இது பகவானின் தெய்வ சக்தியை முழுதும் அடக்கியதல்ல. பகவான் உலகைத் தோற்றுவித்து அடக்குபவர்- அதற்கு அடங்கியவரல்ல. பகவான் இந்த உலகத்தின் ப்ரபு!
'இந்த உலகம் ஜாலக்காரன் magician காட்டும் வித்தை magic போன்றது. நாம் இந்த ஜாலத்தைப் பார்த்து மயங்கி விடுகிறோம். ஜாலக்காரனைப் பார்ப்பதில்லை' என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். இதையே இங்கு பகவான் நமக்குத் தெளிவாக்குகிறார்.
உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் ஓரளவுக்கு பகவானின் தெய்வத்தன்மையைப் ப்ரதிபலிக்கின்றன. இதை பகவானே தமது விபூதி யென்று விளக்குவார். ஆனால் எதுவும் பகவானை முழுமையாகத் தன்னுள் அடக்கியதல்ல.
நாம் மனிதர்கள் ப்ரக்ருதி வசப்பட்டு ( தம் வசமிழந்து ) கர்மத்தளையினால் பிறவியெடுக்கிறோம். பகவான் நம் நன்மைக்காக அவதாரமாக வருகிறார். இதை முன்பே விளக்கினார். அவர் மானுட உருவில் இருந்தாலும் அவர் ப்ரக்ருதிக்கு வசப்பட்டவரல்ல. அவர் ப்ரக்ருதியைத் தன்வசமாகக் கொண்டு, தன் தெய்வத்தன்மையால் தானே அவதரித்தவர் [ "ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா." 4.6. இங்கும் ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய என்று சொல்கிறார், 9.8.] அதனால் நாம் அவருடைய மானுட வுருவைக்கண்டு ஏமாந்துவிடக் கூடாது!
பகவானைத் தொழுபவர்களும் தொழாதவர்களும்
अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम्।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम्।।9.11।।
அவஜானன்தி மாம் மூடா மானிஷீம் தனும் ஆஶ்ரிதம்
பரம் பாவம் அஜானன் தோ மம பூத மஹேஶ்வரம் 9. 11
என்னுடைய மேலான இயல்பை - உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரன் என்பதை- அறியாத மூடர்கள் மனித உடல் தாங்கியிருக்கும் என்னை, அற்பமாக நினைத்து அவமதிக்கிறார்கள்.
मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः।।9.12।।
மோகாஶா மோக கர்மாணோ மோகஞானா விசேதஸ:
ராக்ஷஸீம் ஆஸுரீம் சைவ ப்ரக்ருதீம் மோஹினீம் ஶ்ரிதா : 9.12
வீணான ஆசை யுடையவர்களும், வீண் செயலைச் செய்பவர்களும், அறிவு கெட்டவர்களும், நிலையான மனது இல்லாதவர்களுமாகிய இவர்கள் ராக்ஷஸத்தன்மையையும், அஸுரத்தன்மையையும் சார்ந்துள்ளவர்கள்.
महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्।।9.13।।
மஹாத்மானஸ்து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதிமாஶ்ரிதா :
பஜன்த் யனன்யமனஸோ ஞாத்வா பூதாதிம் அவ்யயம் 9.13
பார்த்தா ! ஆனால் தெய்வீக இயல்புடைய பெரியோர்கள் என்னை இந்த உலகங்களுக்கெல்லாம் காரணம் என்றும் அழிவற்றவன் என்றும் அறிந்து வேறு எதிலும் நாட்டமில்லாமல் [அனன்ய மனஸா ] வழிபடுகிறார்கள்.
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।।9.14।।
ஸததம் கீர்தயன்தோ மாம் யதன்தஶ்ச த்ருடவ்ரதா :
நமஸ்யன் தஶ்ச மாம் பக்த்யா நித்யயுக்தோ உபாஸதே 9.14
திட விரதம் பூண்ட பக்தர்கள் இடைவிடாது என்னை கீத்தனம் செய்துகொண்டும், என்னை நமஸ்கரித்துக்கொண்டும், எப்பொழுதும் என்னுடைய த்யானத்திலேயே நிலைத்திருந்தும், ஒரே பக்தியுடன் என்னை அடையும் முயற்சியில் ஈடுபட்டு வழிபடுகிறார்கள்.
ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम्।।9.15।।
ஞான யஜ்ஞேன சாப்யன்யே யஜன் தோ மாம் உபாஸதே
ஏகத்வேன ப்ருதக்த்வேன பஹுதா விஶ்வதோமுகம் 9.15
வேறு சிலர் ஞான யஜ்ஞத்தால் [தான் வேறு என்று எண்ணாத நிர்குண உபாஸனை ) ஒன்றிய நிலையில் வழிபடுகிறார்கள். சிலர் விராட் ஸ்வரூபம் கொண்ட என்னை பலவாறு எண்ணியும் வழிபடுகிறார்கள்.
PTI
இந்தப் பகுதி மிகவும் ரசமானது. இங்கு வரும் ஒவ்வொரு விஷயத்தையும் பகவான் பின்னால் மேலும் விளக்குவார். இதுவே கீதையில் பகவான் சொல்லும் முறை. பகவானைத் தெரிந்து வழிபடுவதற்கும் அவன் அருள் வேண்டும். " அவனருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மாணிக்க வாசக ஸ்வாமிகள். இதற்கு கொஞ்சமாவது பூர்வ புண்யம் வேண்டும்.
" ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த " என்று முதல் பாட்டிலேயே சொல்கிறார் ஞானசம்பந்தர். இதுவே தெய்வ ஸம்பத். இது இல்லாதது அஸுர ஸம்பத். இதை 16வது அத்யாயம் விளக்கும். மேலும் இங்கு ஸகுண உபாஸனை- நிர்குண உபாஸனை என்பதையும் சொல்கிறார். இதையும் 12வது அத்யாயத்தில் விளக்குவார்.
No comments:
Post a Comment