Sunday, 17 July 2016

46. கீதை என்னும் பொக்கிஷம்- 8



46. கீதை என்னும் பொக்கிஷம்- 8



இரு வழிகள்

ஸ்ரீ பகவான் அவதரித்த மஹாபாரத காலத்தில் நடைமுறையில் இருந்த வைதீக  மதம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. ஒன்று, ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் பின்பற்றிய ஞான மார்கம். இது உலகம், உயிர், கடவுள் ஆகியவற்றின் தொடர்பை ஆராய்ந்து, இதற்குமேல் "ப்ரஹ்மம் " என்பது உண்டு; அதுவே இந்த ப்ரபஞ்சமாக ஆகியிருக்கிறது; அதுவே ஆத்மாவாக ஒவ்வொரு உயிரிலும் இருக்கிறது , ஜீவன் உண்மையில் அந்த ஆத்மாவாகவே இருக்கிறான் என்பதை அனுபவபூர்வமாக அறிவது. இரண்டாவது வழி, கர்ம மார்கம். இது பலவகை யாக யஜ்ஞாதிகளைச் செய்து  ஸ்வர்கம் முதலிய போகங்களை அனுபவித்து படிப்படியாக உயர்நிலை எய்துவது. இது கர்ம காண்டம். ஆனால் நாளடைவில் போகங்களை அடைவதே குறிக்கோளாக மாறிவிட்டது. இதன் முக்கிய அம்சம் யாக-யஜ்ஞங்கள் தான்- இவர்கள் தெய்வத்தைக்கூட மதிக்கவில்லை. இந்த நிலையை  பூர்வமீமாம்சை என்பார்கள். இந்த நிலையை ஸ்ரீ ரமண பகவான் அடியாரான ஸ்ரீ முருகனார் தமிழில் விளக்கினார்:

தாரு வனத்திற் தவஞ்செய்  திருந்தவர் 
பூருவ  கன்மத்தா   லுந்தீபற
போக்கறை போயினர் உந்தீபற.

கன்மத்தை யன்றிக் கடவுள் இலையெனும்
வன்மத்த ராயினர் உந்தீபற
வஞ்சச் செருக்கினா லுந்தீபற.

[பூருவ கன்மம் என்பது பூர்வ மீமாம்ஸை. இதைப் பின்பற்றியவர்கள்
கர்ம காண்டிகள், தாருகவனத்து ரிஷிகள்] 

மஹாபாரத காலத்தில் இவை இரண்டுமே ப்ரதானமாக இருந்தன. இதையே பகவானும் " நான் முன்பு  ஸாங்க்யம், (கர்ம ) யோகம் என்று இரண்டு நிஷ்டைகள் வகுத்தேன் " என்று சொன்னார்.



காம்ய கர்மங்களின் பயனின்மை









ஸ்ரீ பகவான் அவதாரம் ஒரு புது வழியைக் காட்ட வந்தது. 
அர்ஜுனன் மரபுவழியில் கல்வி கற்றவன். அதனால் அவனுக்குத் தெரிந்த விஷயங்களிலிருந்து ஆரம்பித்தே புதியவற்றைச் சொல்கிறார்.












यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्िचतः।

वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः।।2.42।।



कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।

क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति।।2.43।।



யாமிமாம் புஷ்பிதாம் வாசம்  ப்ரவதன்த்ய விபஶ்சித:
வேதவாத ரதா : பார்த நான்யதஸ்தீதி வாதின:                      2.42
காமாத்மான: ஸ்வர்கபரா ஜன்மகர்ம ஃபலப்ரதாம்
க்ரியாவிஶேஷ பஹுலாம் போகைஶ்வர்ய கதிம் ப்ரதி          2.43


பார்த்தா ! அறிவு கெட்டவர்கள் வேதத்தின் அர்த்தவாதத்தில் பற்றுக்கொண்டு,  வேறு ( உயர்ந்த லக்ஷ்யம், பொருள் ) இல்லை என்று வாதம்செய்து, ஆசை நிறைந்த மனத்தினராகி, ஸ்வர்கத்தையே மேலானதாகக் கருதி, இன்ப  நுகர்ச்சியையும் உயர் பதவியையும் விரும்பி, ( மீண்டும் மீண்டும் ) ஜன்மம் தருவதையே  தொழிலாகக் கொண்டதும், விசேஷமானதும் விரிவானதுமான பல க்ரியைகளைப் பற்றிய பூப்போன்ற வார்த்தைகளை  இனிமையாகப் பேசுவார்கள்.

भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।

व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते।।2.44।।




போகைஶ்வர்ய பரஶக்தானாம்  தயாபஹ்ருத சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே                    2.44


போகத்திலும், உயர்பதவியிலும் நாட்டமுடைய இவர்கள் அதனால் விவேகத்தை  இழந்தவர்கள். இவர்களுக்கு  நிச்சயமான புத்தி  மனதில் உதிக்காது.


त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।

निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्।।2.45।।



த்ரைகுண்ய விஷயா வேதா 
நிஸ்த்ரைகுண்யோ பவ அர்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய ஸத் வஸ்தோ 
நிர்யோகக்ஷேம ஆத்மவான்.                                                       2.45



அர்ஜுனா !  வேதங்கள் முக்குணங்களைப் பற்றியவை.( அவற்றிற்குட்பட்ட போகங்களையும்,  அவற்றைப் பெறும் சாதனை முறைகளையும் கூறுபவை. ) ஆகவே நீ  ( முக்குணங்களின் வசத்ததாகிய )  இருமைகளுக்கு ஆட்படாதவனாக  ஆகிவிடு. நித்ய வஸ்துவான பரமாத்மாவிடம்  நிலைபெற்ற மனத்தினனாகி,  பொருள் சேர்ப்பது- அதைக்காப்பது ஆகிய முயற்சியை விரும்பாதவனாகி, ஆத்மாவில் நாட்டமுடையவனாக ஆவாயாக.

एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे।

कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे।।4.32।।



ஏவம் பஹுவிதா யஜ்ஞா  விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜான் வித்தி தான்  ஸர்வா னேவம் ஞாத்வா விமோக்ஷ்யஸே  4.32


இவ்வாறு இன்னும் அனேகவிதமான யஜ்ஞங்கள் வேதங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவை மனம், உடல், புலன்கள்  அகியவற்றால் செய்யப்படவேண்டியவை என்று அறிந்துகொள். இவ்வாறு தத்வரீதியாக அறிந்து கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய். 

त्रैविद्या मां सोमपाः पूतपापा

यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते।

ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक

मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान्।।9.20।।




த்ரைவித்யா மாம்  ஸோமபா: பூதபாபா
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்த்தயன்தே
தே புண்ய மாஸாத்ய ஸுரேந்த்ரலோகம் அஶ்னன்தி
திவ்யான் திவி தேவபோகான்.                                                      9.20


மூன்று வேதங்களிலும்  விதித்துள்ளபடி யாகங்கள் செய்து, ஸோமரஸம் பருகி, பாவங்கள் நீங்கி தூய்மை பெற்றவர்கள் , என்னை யாகங்களால் உபாசித்து ஸ்வர்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்யத்தின் பயனாக  தேவலோகம் அடைந்து அங்கு தேவபோகம் அனுபவிக்கிறார்கள்.  

ஆனாலும் என்ன?



ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं

क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति।

एव त्रयीधर्ममनुप्रपन्ना

गतागतं कामकामा लभन्ते।।9.21।।


தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஶாலம் 
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶன்தி
ஏவம் த்ரயீ தர்ம மனுப்ரபன்னா
கதாகதம்  காமகாமா லபன்தே                                                     9.21


அவர்கள் அந்தப்பரந்து விரிந்த ஸ்வர்கத்தில் போகங்களை அனுபவித்துவிட்டு,  புண்யம் தீர்ந்து போனவுடன்  மரணம் தழுவியதான மண்ணுலகை அடைகிறார்கள். இவ்வாறு போகத்தில் பற்றுக்கொண்டு மூவேதத்தில் கூறப்பட்ட கர்மங்களை அனுசரித்து, இவர்கள் திரும்பத் திரும்ப பிறந்து-இறக்கும் நிலையை அடைகிறார்கள்.



இது முக்கியமான பகுதி. வேதத்தில் இருவித கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஒன்று, அவசியம் செய்யப்படவேண்டியது, இவை "கடன் ". இவற்றைச் செய்வதால்  நம் கடன் தீரும்; புண்யம் வராது. இவற்றை " நியதம் கர்ம ", "கார்யம் கர்ம " என்பார் பகவான். "நியதம் குரு கர்ம த்வம் " என்கிறார்.[3.8 ] மற்றது  "காம்ய கர்ம" - ஆசைவசப்பட்டுச் செய்வது. இங்கு பகவான் காம்ய கர்மங்களை அறவே கண்டிக்கிறார்.

இங்கு 2.45ல் பகவான் சொல்லும் " நிர் யோகக்ஷேம ஆத்மவான் " என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. பகவான் இவற்றை மீண்டும் சொல்லுவார்!

யஜ்ஞ கர்மங்களுக்கும் பகவானுக்கும் தொடர்பு





கர்ம காண்டிகள்  யஜ்ஞங்கள் செய்வார்கள்; ஆனால் பகவானை  நினைப்பதில்லை! யஜ்ஞம் தானே பலன் தரும் என்ற கொள்கையுடையவர்கள். அதனால் பகவான் சொல்கிறார்:


अहं क्रतुरहं यज्ञः स्वधाऽहमहमौषधम्।

मंत्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम्।।9.16।।



அஹம் க்ரதுர்  அஹம் யஜ்ஞ:  ஸ்வதாஹமஹமௌஷதம்
மன்த்ரோ அஹம் அஹமேவாஜ்யம்  அஹம் அக்னிர் அஹம் ஹுதம் 9.16




க்ரதுவும் நானே, யஜ்ஞமும் நானே; பித்ரு யஜ்ஞமான ஶ்ராத்தமும் நானே. ஹோம த்ரவ்யங்களும் மூலிகைகளும் நானே. ஓதப்படும் மன்த்ரமும் நானே. நெய்யும் நானே, அக்னியும் நானே. ஹோமம் என்ற கர்மாவும் நானேதான் !

இதையே முன்னர் வேறு விதமாகச் சொன்னார் :


ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।

ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना।।4.24।।



ப்ரஹ்மார்பணம்  ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினா              4.24


வேள்வியில் உபயோகிக்கப்படும் உபகரணமும் ப்ரஹ்மம்தான். ஹோமம் செய்யப்படும் த்ரவ்யமும் ப்ரஹ்மம்தான். ப்ரஹ்மமேயான கர்த்தாமூலம்  ப்ரஹ்மமான  அக்னியில் ஆஹுதிசெய்வது என்ற செயலும் ப்ரஹ்மம்தான். ப்ரஹ்மம் ஆகிய செயலில் ஊன்றி நிற்கின்ற அவன் அடையத்தக்க பலனும் ப்ரஹ்மமேதான் !


[ஆக, நிர்குணமாக ப்ரஹ்மம் என்றாலும் சரி, ஸகுணமாக பகவான் என்றாலும் சரி, பரமாத்ம ஸம்பந்தம் இல்லாமல் யஜ்ஞம் பயன் தராது. ]

पिताऽहमस्य जगतो माता धाता पितामहः।

वेद्यं पवित्रमोंकार ऋक् साम यजुरेव च।।9.17।।



பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதமஹ :
வேத்யம் பவித்ரமோங்கார  ருக்ஸாம யஜுரேவ  ச                        9.17



இந்த உலகமனைத்தையும் தாங்குபவனும்,  கர்மங்களுக்குப் பலன் அளிப்பவனும். தந்தையும், தாயும், பாட்டனாரும்,  அறிந்துகொள்ளவேண்டியவனும், புனிதமானவனும், ஓங்காரமும்,  ருக், ஸாம, யஜுர் என்ற மூன்று வேதங்களும் நானேதான்.


गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत्।

प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम्।।9.18।।



கதிர்பர்தா ப்ரபு : ஸாக்ஷி  நிவாஸ ஶரணம் ஸுஹ்ருத்
ப்ரப: ப்ரலய : ஸ்தானம் நிதானம் பீஜமவ்யயம்                             9.18


அடையத்தக்க பரமபதம். காத்துப் போஷிப்பவன், எல்லோரையும் ஆள்பவன், சாக்ஷியும், அனைத்திற்கும் இருப்பிடமும்,  புகலிடமும், நண்பனும், எல்லாம் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்கும் காரணமும்,  நிலையாகத்  தாங்குமிடமும், பொக்கிஷமும், அழிவில்லாத விதை ஆகிய அனைத்தும் நானேயாவேன்.

गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत्।

प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम्।।9.18।।



தபாம்யஹமஹம் வர்ஷம்  நிக்ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச 
அம்ருதம் சைவ ம்ருத்யுஶ்ச ஸத ஸச்சாஹம் அர்ஜுன                            9.19



அர்ஜுனா ! நான் தான் சூரியனுடைய வடிவில் வெப்பமளிக்கிறேன்.  மழையை உள்ளிழுத்துத் தடுத்து நிறுத்துகிறேன், பொழியவும்  செய்கிறேன். நானே இறவாப் பெருநிலையும் ஆவேன்; காலனும் ஆவேன்.அழிவது, அழியாதது - எல்லாமே நான் தான்.


अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च।

न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते।।9.24।।



அஹம் ஹி  ஸர்வ யஜ்ஞானாம் போக்தாச ப்ரபுரேவ ச 
ந து மாமபி ஜானன்தி தத்வேனாதஶ்ஸ்யவன்தி தே                          9.24


எல்லா  யாகங்களையும் ஏற்றுக்கொள்பவனும், அவற்றிற்குரிய பலன் அளிப்பவனும், நான் தான். ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி அறிவதில்லை. அதனால் வீழ்ச்சியடைகிறார்கள்.                          


3 வது அத்யாயம் ஶ்லோகம் 14-15ல் உயிர்கள் உணவிலிருந்து  வருகின்றன, உணவு மழையிலிருந்து வருகிறது, மழைக்குக் காரணம் யஜ்ஞம் , யஜ்ஞம் வேதத்தில்   நிலைபெற்றது என்றார். இங்கு மேலும் விளக்கமாக, யஜ்ஞத்திற்கு நாயகனும்  அதற்கு பலன் தருபவரும் தானே என்கிறார். இவ்வாறு கீதையில் ஒவ்வொரு சொல்லும் கருத்தும் தொடர்புடையன. ஒவ்வொன்றையும் பகவான் பல இடங்களில் பல கோணங்களிலிருந்து விளக்குகிறார். இது பகவான்  கையாளும்  விசேஷமான  முறையாகும்.



குறிப்பு :
ஆஸ்தீக வட்டாரங்களில் யஜ்ஞம் பற்றிய சர்ச்சை இருந்துகொண்டே இருக்கிறது. இங்கு இரண்டு விஷயங்கள் கவனத்திற்குரியவை:

1. 'க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஞங்கள் விதிக்கப்பட்டிருக்கிறன.ஆனால் இவை ப்ரஹ்ம அல்லது ரிஷி யஜ்ஞம், தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், நர யஜ்ஞம், பூதயஜ்ஞம் என்ற "பஞ்ச யஜ்ஞங்க"ளையே குறிக்கும்., வேறு யஜ்ஞங்களையல்ல ' என்று  காசியில் பண்டிதர்கள் சபையில் ஆணித்தரமாக வாதம் செய்து, சாஸ்திர பூர்வமாக நிரூபித்தார் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸ ஸ்வாமிகள்.  [ 17ம் நூற்றாண்டு.] இதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார் அமரர் ஸ்வாமிநாத ஆத்ரேயர். அவர் எழுதிய ஸ்ரீ ராமதாஸர் சரிதம் பார்க்கவும்.
2.  கலிகாலம் நடக்கும் நிலையில் யாக-யஜ்ஞங்களைச் சரியாகச் செய்ய முடியாது என்று சொன்னார்  ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ரர். இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் 59வது ஜகத்குரு- ஆசார்யாளாக இருந்தவர்.[17ம் நூற்றாண்டு ] இக்காலத்தில் த்ரவ்ய ஸுத்தி, மந்த்ர ஸுத்தி, ஸ்தல ஸுத்தி, எஜமான ஸுத்தி என்று எதுவுமே சரியாக இல்லை; முறைப்படி யஜ்ஞங்கள் செய்வது இயலாது; அப்படிச் செய்வதும் அவசியமே இல்லை என்று சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே ஸ்தாபித்தார் ஸ்ரீ போதேந்த்ரர். இதை இவர் எழுதிய " ஸ்ரீ பகவான் நாமாம்ருத  ரஸோதயம்" என்ற புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.

இந்த இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டவர்கள்  ஸ்ரீ ராம நாம வங்கி, சென்னை-33. ஆஸ்திகர்கள் அனைவரும் படிக்கவேண்டியவை.






No comments:

Post a Comment