40. கீதை என்னும் பொக்கிஷம்-2
ஸ்ரீ பகவான் அர்ஜுனனுக்கு பதில் சொல்லத் தொடங்குகிறார். அவர் முதலில் சொல்லும் விஷயம் ஆத்ம ஞானம் பற்றியது. 'ஆத்மா அமரத்தன்மை வாய்ந்தது-அழிவில்லாதது. நீயும் நானும் இல்லாமல் இருந்தோம் என்பது இல்லவே இல்லை. உடல் வந்துபோகிறது; ஆத்மா என்றும் இருப்பது. உண்மையில் இருப்பதற்கு அழிவில்லை; இல்லாதது இருப்பது என்பதும் இல்லை. [ நாஸதோ வித்யதே பாவோ நா பாவோ வித்யதே ஸத: 2.16 ] எதனால் இந்தக் காணும் உலகம் முழுதும் வ்யாபிக்கப்பட்டிருக்கிறதோ அது அழிவற்றது என்று அறிந்துகொள் [அவிநாஶி து தத் வித்தி ஏன ஸர்வமிதம் ததம் 2.`17 ]' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறார். ஓர் இடத்தில் , 'சரி, நீ க்ஷத்ரியன் , உன் தர்மப்படியே பார் ' என்று சொல்லி கர்மத்தைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்!
ஏன் இந்த திடீர் மாறுதல்?
ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீ க்ருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்குமிடையே நடந்த ஸம்வாதம்= உரையாடல். முகத்தைப் பார்த்துத்தான் பேசவேண்டும். அர்ஜுனனது முகக்குறிப்பைக் கண்ட க்ருஷ்ணர் , அர்ஜுனன் இருந்த நிலையில் ஆத்மஞானம் பற்றிய விஷயங்கள் அவன் தலைக்குமேல் போகிறதென்று கண்டார் போலும்! அதனால் அர்ஜுனன் நிலைக்கு இறங்கிவந்து அவனுக்குத் தெரிந்த விஷயமாகிற க்ஷத்ரிய தர்மம் பற்றிப் பேசத்தொடங்குகிறார். கர்மம் எப்படி யோகமாகிறது, யோகி எப்படி ஸ்திதப்ரக்ஞனாகிறான் என்று விளக்குகிறார். இந்த இடத்தில், "அப்படி எல்லாப் புலன்களையும் அடக்கியவன்கூட, என்னையே பரகதியாகக் கொண்டு அமர (அமைய) வேண்டும் என்று சொல்கிறார்.
तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।
தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர 2.61
மத்பர= என்னையே பரம்பொருளாக-பரம கதியாகக் கொண்டு.
இதுவே ஸ்ரீ க்ருஷ்ணன் தன்னை பகவான்- பரம்பொருள் என்று அறிவிக்கும் முதல் இடம்! இதே சொற்கள் 6.14 லிலும் 12.6 லும் வருகின்றன.
எப்படிப்பட்ட ஞானியும் யோகியும் பகவானே பரம்பொருள் என்ற பக்தியில்லாமல் உருப்படமுடியாது என்பது தெளிவாகிறது. உண்மையான ஞானத்திற்கும் யோகத்திற்கும் பக்தியே அடிப்படை என்பதும் தெரிகிறது! இதைப் பிற இடங்களிலும் விளக்குவார்.
இரண்டாவது அத்யாயத்தில் கர்மத்தைப்பற்றிப் ப்ரஸ்தாபித்த பகவான் மூன்றாம் அத்யாயத்தில் அதை மேலும் விளக்குகிறார். பற்றின்றி கர்மம் செய்பவன்கூட பரமாத்மாவைத்தான் அடையவேண்டும்- அடைகிறான் என்று சொல்கிறார்.
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुषः।।3.19।।
அஸக்தோ ஹ்யாசரன் கர்ம பரம் ஆப்னோதி பூருஷ: 3.19
பரமனிடம் சேர்க்காத கர்மம் கர்மமல்ல. இதை மேலும் தெளிவாகச் சொல்கிறார்:
मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा।
निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः।।3.30।।
மயி சர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத் யாத்மசேதஸா
நிராஶீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர 3.30
அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்துடன் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, ஆசையற்றவனாக, மமகாரமற்றவனாக , தாபமில்லாதவனாக [மனக்கொதிப்பில்லாமல்] யுத்தம் செய்.
இதை பகவான் "எனது கொள்கை" [மே மதம் ]என்று தெளிவாகச் சொல்கிறார்! இதன்படி நடந்தால் என்ன ஆகும், இதைப் பின்பற்றாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் சொல்கிறார்!
ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः।।3.31।।
யே மே மதமிதம் நித்யமனுதிஷ்டன்தி மானவா:
ஶ்ரத்தாவன்தோ அனஸூயன்தோ முச்யன்தி தேஅபி கர்மபி :
எந்த மனிதர்கள் குற்றம்குறை காணாதவர்களாகவும், ஶ்ரத்தையுடனும் என்னுடைய இக்கொள்கையை எப்பொழுதும் பின்பற்றி நடக்கிறார்களோ, அவர்கள் அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
[ பகவானுக்கு அர்ப்பணிக்காத கர்மம் தளையுண்டாக்கும்; விடுதலை தராது ]
ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम्।
सर्वज्ञानविमूढांस्तान्विद्धि नष्टानचेतसः।।3.32।।
யே த்வேததப் யஸூயன்தோ நானுதிஷ்டன்தி மே மதம்
ஸர்வஞான விமூடாம்ஸ்தான்வித்தி நஷ்டானசேதஸ :
ஆனால் எந்த மனிதர்கள் என்னிடம் குறைகாண்பவர்களாக, என்னுடைய இக்கொள்கையை ஏற்று நடப்பதில்லையோ, அந்த மூடர்கள், ஞானத்தில் முழுமையான அறிவுமயக்கம் அடைந்தவர்கள் என்றும் சீரழிந்து போனவர்கள் என்றும் அறிந்துகொள் .
எனவே, கர்மத்தில் ஈடுபட்டவர்களும் பகவானிடம் பக்தி பூண்டு கர்மத்தை அவருக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்பது தெரிகிறது.இதை பகவானே சொல்கிறார்:
भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम्।
सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति।।5.29।।
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வலோக மஹேஶ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஞாத்வா மாம் ஶான்தி ம்ருச்சதி 5.29
என்னுடைய பக்தன் , எல்லா யாகங்களையும் தவங்களையும் ஏற்பவன் நான் என்று அறிகிறான். நான் எல்லா லோகங்களுக்கும் ஈஶ்வரன் என்பதையும் அறிகிறான். சராசரத்தில் உள்ள அகில ப்ராணிகளிடத்திலும் அன்பும் அருளும் உடையவன் நான் [ஸுஹ்ருதம்] என்பதையும் அறிகிறான். இவ்வாறு தத்வரீதியாக அறிந்து ஶாந்தி அடைகிறான்.
[ நாம் செய்யும் கர்மத்தை ( யாகம், தவம் ஆகியவற்றை ) ஏற்பவர் பகவான் தான்; அதற்குரிய பலனை அளிப்பவரும் பகவான்தான்.. ஆனால் கர்மகாண்டிகள் பகவானை நினைப்பதில்லை. அதனால் செய்யும் கர்மத்தினால் மேலும் கட்டுப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தலைவன் பகவானே என்பது தெரிந்து கர்மம் செய்தால் மனவமைதி யுண்டாகும். அகந்தை எழாது. இதையே பகவான் இங்கு சொல்கிறார். ஸ்ரீ ரமண பகவான் இதைப் பின்வருமாறு சொன்னார்:
கன்மம் பயன் தரல் கர்த்தன தாணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் ஜடமதால் உந்தீபற.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீபற
வீடு தரலிலை உந்தீபற.
கருத்தனுக்காக்கு நிட்காமிய கன்மம்
கருத்தைத் திருத்தியஃதுந்தீபற
கதிவழி காண்பிக்கும் உந்தீபற.
பக்தியில்லாமல் கர்மம் பயன் தராது!
No comments:
Post a Comment